Home இலங்கையாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் மற்றும் வலி. வடக்கு காணி விடுவிப்பு: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் விளக்கம்!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் மற்றும் வலி. வடக்கு காணி விடுவிப்பு: நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் விளக்கம்!

by admin
வலி. வடக்கில் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பாகக் குறிப்பிட்ட கால எல்லையை எம்மால் தற்போதைக்குக் கூற முடியாது என்றும், உடனடியாக விடுவிக்கக்கூடிய காணிகளை இனங்கண்டு விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இந்தத் தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
அண்மையில் பாதுகாப்பு பிரதி அமைச்சர், இலங்கை ஜனாதிபதியின் நேரடிப் பணிப்புரைக்கு அமைய யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தார். வடக்கில் உள்ள இராணுவக் கட்டமைப்புகளை எவ்வாறு மறுசீரமைத்து, மக்களின் காணிகளை மீண்டும் அவர்களிடமே கையளிக்கலாம் என்பது குறித்து ஆராய்வதே இவ்விஜயத்தின் முக்கிய நோக்கமாகும். வடமாகாண ஆளுநர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளடங்கிய உயர்மட்டக் குழுவினர், தற்போதும் இராணுவ முகாம்கள் அமைந்துள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று கள நிலவரங்களை விரிவாக ஆராய்ந்துள்ளனர்.
இவ்விஜயத்தின்போது, பலாலி சர்வதேச விமான நிலைய விஸ்தரிப்புக்குத் தேவையான காணிகள் குறித்து முக்கியமாகக் கலந்துரையாடப்பட்டது. இதன்போது, விமான நிலையத் தேவைக்காக முன்னரே சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்குரிய நட்டஈடுகள் இதுவரை காணி உரிமையாளர்களுக்கு வழங்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலுவை நட்டஈடுகளைத் துரிதமாக வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதோடு, விமான நிலைய விஸ்தரிப்புக்காக மேலும் எத்தனை ஏக்கர் காணிகள் தேவைப்படும் என்பது குறித்த தரவுகளும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு அடுத்தபடியாக, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நாட்டின் மிக முக்கிய விமான நிலையமாக அபிவிருத்தி செய்வதே தற்போதைய அரசாங்கத்தின் இலக்காகும். இதனால் அதற்குத் தேவையான காணிகளை முறைப்படி சுவீகரித்து, அவற்றுக்கான உரிய இழப்பீடுகளை மக்களுக்கு வழங்கிவிட்டு, ஏனைய காணிகள் அனைத்தையும் சிவிலியன்களிடமே மீள ஒப்படைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கிடையில், அவசர நடவடிக்கையாக வலி. வடக்கில் சில பகுதிகளில் இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு, இராணுவத்தினர் வெளியேறிய பின்னரும், தற்போதும் பாதுகாப்புத் தரப்பினரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ள காணிகளை உடனடியாக விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், இப்பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பாடசாலைகளை அடையாளங்கண்டு, அவற்றையும் சிவிலியன் பயன்பாட்டுக்காக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
காணி விடுவிப்பு என்பது பாதுகாப்புப் பொறிமுறைகளுடன் தொடர்புபட்டது என்பதால், அதற்கான துல்லியமான கால எல்லையை இப்போதே அறிவிக்க முடியாது என அவர் வலியுறுத்தினார். பாதுகாப்பு பிரதி அமைச்சரின் நேரடி விஜயத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை, நாடாளுமன்றப் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விரிவாக ஆராயப்படவுள்ளது. அதன் பின்னர், முதற்கட்டமாக உடனடியாக விடுவிக்கப்படக்கூடிய காணிகள் விடுவிக்கப்படும் என்றும், எஞ்சிய காணிகள் குறித்து அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் மேலும் தெரிவித்துள்ளார்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More