62
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் தொடரும் மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சியின் போது, இலங்கையின் கடந்த கால ஆட்சியாளர்களின் மனித உரிமை மீறல்களையும், போர்க்காலக் கொடூரங்களையும் வெளிப்படுத்தும் வகையிலான அதிர்ச்சி தரும் ஆதாரங்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றன. நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக, தொல்பொருள் நிபுணர்கள் மற்றும் தடயவியல் மருத்துவர்களின் முன்னிலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த அகழ்வுப் பணியின் 32 ஆவது நாளில் (மூன்றாம் கட்ட அகழ்வின் 22 ஆம் நாள்) பல முக்கிய சான்றுகள் கண்டறியப்பட்டுள்ளன.
நேற்றைய தின (11.06.26) அகழ்வாராய்ச்சியின் போது, புதிதாக மேலும் 02 மனித என்புக்கூடுகள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. அதேவேளை, ஏற்கனவே அடையாளப்படுத்தப்பட்ட என்புக்கூடுகளில் ஒரு சிறுவனுடைய என்புக்கூடு உட்பட 09 மனித என்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில், செம்மணி வளாகத்தில் இதுவரை மொத்தம் 341 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 327 என்புக்கூடுகள் முழுமையாக மீட்கப்பட்டு நீதிமன்றப் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இப்பகுதியில் நேற்று ஒரு புதிய மனித என்புக்கூட்டுக் குவியல் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரையிலான அகழ்வுப் பணிகளில் கண்டறியப்பட்ட கூட்டுக்குவியல்களில் இது 23 ஆவது குவியல் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச விதமுறைகளுக்கு அமைவாகவும், நீதித்துறை கண்காணிப்பிலும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த அகழ்வுப் பணிகள், கடந்த காலங்களில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான முக்கிய நீதிக்கோரிக்கையாக மாறியுள்ளது.
Spread the love

