50
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் த்தாக்கத்திற்கு உள்ளாகி சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தற்போதைய சூழலில் சடுதியாக அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் எச்சரித்துள்ளார்.
யாழ் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்த வருடத்தின் ஜூலை 08ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் யாழ் மாவட்டத்தில் 694 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக, கடந்த ஜூன் மாத இறுதி வரை முழுமையான கட்டுப்பாட்டிலிருந்த டெங்கு பரவல், ஜூலை மாதத்தின் முதல் 7 நாட்களில் மட்டும் 65 பேருக்குப் பரவி, சடுதியான உயர்வைக் காட்டியுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டின் மேல் மாகாணம், குறிப்பாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் டெங்கு பரவல் மிகத் தீவிரமடைந்துள்ளது. இவ்வாறான பின்னணியில், மேல் மாகாணத்தின் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர்களும், கொழும்பில் தொழில் நிமித்தம் தங்கியிருப்பவர்களும் விடுமுறைக்காக சொந்த ஊருக்குத் திரும்பும்போது டெங்கு தொற்றோடு வருவது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் மூலமாகவே யாழ்ப்பாணத்தில் டெங்கு பரவல் தீவிரமடைந்து வருவதாக சுகாதாரப் பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய பூச்சியியல் ஆய்வுகளின்படி, யாழ் மாவட்டத்தில் டெங்குவை பரப்பும் நுளம்புக் குடம்பிகளின் செறிவு மிக அதிகமாகக் காணப்படுவதால், நோய் வேகமாகப் பரவக்கூடிய பேராபத்து நிலவுகிறது.
கடந்த வருடத்திலும், இந்த வருடத்தின் இதுவரையிலான காலப்பகுதியிலும் யாழ் மாவட்டத்தில் டெங்குவினால் எந்தவொரு மரணமும் சம்பவிக்கவில்லை என்பது ஆறுதலான விடயமாகும். எனினும், கடந்த காலங்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு, நோயாளர்கள் மிகத் தாமதமாகவே வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டமையே பிரதான காரணமாகும்.
எனவே, இக்காலப்பகுதியில் பொதுமக்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், அது ஒருநாள் காய்ச்சலாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாமல், உடனடியாக தகுந்த மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறு அன்பாய் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. வீடுகள், வேலைத்தளங்கள் மற்றும் பொது இடங்களில் நுளம்புகள் பெருகாதவாறு துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு ஒத்துழைப்பு வழங்குவது அவசியமாகும்.
ஜூலை 13 முதல் 15 வரை யாழில் விசேட டெங்கு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனம்!
யாழ் மாவட்டத்தில் தீவிரமடைந்து வரும் டெங்கு பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இம்மாதம் ஜூலை 13ஆம் திகதி தொடக்கம் 15ஆம் திகதி வரை “சிறப்பு டெங்கு கட்டுப்பாட்டு வாரம்” ஆகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் வீடுகள், பாடசாலைகள், தனியார் மற்றும் உயர்கல்வி நிறுவனங்கள், வர்த்தக நிலையங்கள், வணக்கஸ்தலங்கள் ஆகிய அனைத்து இடங்களிலும் முழுமையான சிரமதானப் பணிகளை முன்னெடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி வி.பி.எஸ்.டி. பத்திரண மற்றும் யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ. கேதீஸ்வரன் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற கூட்டத்திலேயே இம்முடிவு எட்டப்பட்டது.
இந்த விழிப்புணர்வு வாரத்தின்படி, ஜூலை 13ஆம் திகதி அனைத்து வணக்கஸ்தலங்களிலும், 14ஆம் திகதி அரசாங்க அலுவலகங்களிலும், 15ஆம் திகதி பாடசாலைகள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களிலும் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
அத்துடன், பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம அலுவலர்களின் தலைமையில் கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டுச் செயலணிக் கூட்டங்கள் அவசரமாகக் கூட்டப்பட்டு, ஜூலை 13 முதல் 15 வரையான திகதிகளுக்குள் அதிக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்ட பகுதிகளுக்கு திடீர் களப்பயண கண்காணிப்புகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
இக்கூட்டத்தில் சுகாதார அதிகாரிகள், பிரதேச சபை செயலாளர்கள் மற்றும் காவற்துறை, இராணுவ அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டு இதற்கான முழுமையான ஆதரவை வழங்க உறுதியளித்துள்ளனர்.
Spread the love

