கட்டுரைகள்

போராடியவர்களுக்கு சிறை! இனப்படுகொலை புரிந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பு!!

குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன்:-

போராடியவர்களுக்கு சிறை! இனப்படுகொலை புரிந்தவர்களுக்குப் பொதுமன்னிப்பு!!

இலங்கையில் நடந்த போரில் நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைக் குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை ஒன்றை தமிழ் மக்கள் கோரி வருகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் கலப்பு விசாரணைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையின் அழுத்தம், இனப்படுகொலை குற்றச்சாட்டு குறித்த நெருக்கடி என்பவற்றிலிருந்து தன்னை பாதுகாக்க இலங்கை அரசாங்கம்  நல்லிணக்க பொறிமுறை செயலணி என்ற ஒன்றை உருவாக்கியிருக்கிறது.

இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையே தேவை என்பதை பல்வேறு தருணங்களிலும் வலியுறுத்தி வந்துள்ளனர். இலங்கை அரசு இத்தகைய ஒரு கருத்தறியும் அமர்வை நடத்துவது ஒரு அரசியல் சார்ந்த செயற்பாடா அல்லது உண்மையில் பாதிக்கப்பட்டவர்களின் கருத்தை அறியும் அணுகுமுறையா என்ற சந்தேகம் தமிழ் மக்களுக்கு உண்டு. ஏனெனில் கடந்த காலத்தில் தமிழ் மக்களினடம் அறியப்பட்ட கருத்துக்கள் எவையும் இறுதித் தீர்மானங்களின்போது உள்ளடக்காமல் புறக்கணிக்கப்பட்டது.
எவ்வொறனினும் தமிழ் மக்கள் இதன்போது தமது அடிப்படை அபிலாசைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இலங்கை வராற்றில் தமிழ் மக்களின் அடிப்படை அபிலாசைகளைப் புறக்கணித்து பெரும்பான்மையின அபிலாசைகளை நடைமுறைப்படுத்துவதே நல்லிணக்கம் என அர்த்தம் கற்பிக்கப்படுகிறது. நல்லிணக்கம் என்ற பெயரில் இன அழிப்பு யுத்தம் செய்வதும், ஆக்கிரமிப்பு இராணுவத்தை நிலை நிறுத்துவதும், தமிழர் நிலங்களை அபகரிப்பதுவுமே இடம்பெற்றுள்ளன. இதனால் நல்லிணக்கம் என்ற வார்த்தைப் பிரயோகமே அதற்கு மாறான அர்த்தத்தினால் தமிழ் மக்களின் மனங்களை நெருடுபவை.
இலங்கையில் போலியான நல்லிணக்க அணுகுமுறைகளே முன்னெடுக்கப்படுவதாக சிங்கள முற்போக்கு புத்திஜீவிகள் பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். அத்துடன் இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் மனங்களை புரிந்துகொண்டு அவர்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொண்டு அவர்களுக்கு நீதி வழங்குவதே நல்லிணக்கம் என்றும் அவர்கள்சொல்லுகிறார்கள். ஆனால் இலங்கை  அரசோ அதற்கு மாறாக தமிழர் அபிலாசைகளை புறந்தள்ளவும், தமிழர்களுக்குரிய நீதியை மறுக்கவும், தமிழர்களை சமமாக நடத்த மறுப்பதற்காவுமே நல்லிணக்கம் என்ற சொல்லாடலைப் பயன்படுத்துகிறது.
போர்க்குற்றம் சுமத்தப்பட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்று முன்னாள் போராளி ஒருவர் முல்லைத்தீவில் சாட்சியம் அளித்துள்ளார். உண்மையில் இன உரிமைக்காக, விடுதலைக்காக போராடியவர்களை சிறையில் வைத்துக் கொண்டு, இனப்படுகொலை புரிந்தவர்களை வெளியில் விட்டு பொதுமன்னிப்பு வழங்கி வரலாற்றின் வீரர்களாக சித்திரிப்பதுதான் இங்கு நல்லிணக்கம்? இங்கு போராடியவர்களை சிறையிட்டதன் மூலம் போராட்டத்தின் அர்த்தம் பிழையாக காட்டப்படுகிறது. அத்துடன் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்குவதன் மூலம் மனித குலத்திற்கு எதிரான இனக்கொலை குற்றங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன.
இறுதி யுத்தத்தில் போர்க் குற்றம் புரிந்தவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றும் கிளிநொச்சியில் நடந்த அமர்வில் பொதுமக்கள் கருத்துக் கூறியுள்ளனர். அத்துடன் இனப்படுகொலை குறித்த விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்படவேண்டும் என்றும் அதில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதகள் இடம்பெற வேண்டும் என்றும் மக்கள் கூறியுள்ளார்கள். தமிழ் மக்கள் காணாமல் போகச் செய்யப்பட்டோர் ஆணைக்குழு, அரசியல் அமைப்புக்கான கருத்தறியும் அமர்வு, சர்வதேச பிரதிநிதிகளின் சந்திப்பு, தேர்தல் விஞ்ஞானபம் முதலிய பல தருணங்களில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் நடைபெற்ற அமர்வில் முன்னாள் போராளி ஒருவர் வழங்கிய கருத்து மிக முக்கியமானது. முன்னாள்  போராளிகளை அழிக்கும் இராசயன ஊசிகள் போடப்பட்டதாக தெரிவித்துள்ள அந்த முன்னாள் போராளியின் சாட்சியம் பின் யுத்த அழிப்பு சார்ந்த மிக முக்கியமான சாட்சியமாக கருதப்படுகிறது.
“கிரேசிமா நாகசாயி வரலாற்றை எடுத்துக்கொண்டா் கூட கண்டிப்பா இன்றைக்கும் அமெரிக்காவிற்கு இழுக்குத்தான். எங்கண்ட விரலை வெட்டிப்போட்டு தம்பி தெரியாம வெட்டீட்டன் நான் அம்பு வில்லு தாறன் உன்னை பாதுகாக்க என கூறுவது போலத்தான் அரசின் செயற்பாடுகள் இருக்கின்றன. விடுதலைப் புலிகள் இவ்வாறான வேலையைச் செய்யவில்லை. யுத்த தர்மம் என்று ஒன்று உள்ளது. ஸ்ரீலங்கா அரசாங்க இராணுவத்திற்கு யுத்த தர்மத்தைப் பற்றி கடைசிவரை போதிக்க வேண்டும். சரணடையப்போறவங்களைச் சுடுவது நியாமமில்லை. ஏனெனில் அவர்கள் நிராயுதபாணிகள். நான் ஒரு முனைநாள் போராளி. தடுப்பால வந்த பிறகு நாங்கள் யுத்தங்களை விட்டு ஒதுங்கி இருக்கிறம். சொன்னாலும் சொல்லாட்டாலும் உவங்கள் எங்களிற்கு இரசாயண உணவுகளைத் தந்திருக்கிறாங்கள் என்பது எங்களிற்கு விளங்குகின்றது. நான் முன்பு 100 கிலோ தூக்கி எத்தினயோ கிலோமீற்றர் ஓடுற எனக்கு ஒரு பொருளைக்கூட தூக்க முடியவில்லை. கண் பார்வை குறைகின்றது. எங்களிற்கு ஏதோ நடந்திருக்கிறது என்பது மட்டும் விழங்குகின்றது. ஏன் தடுப்பு மருந்து முழுப்பேருக்கும் ஏற்றினவங்கள். ஊசியைக் கொண்டுவந்து போடுவாங்கள். என்ன தடுப்பிற்காக ஏற்றினார்கள் என்று எமக்குத் தெரியாது. ஊசி ஏற்றிய அன்று மாலையே ஒரு போராளி இறந்துவிட்டார். அங்கு என்ன என்ன நடந்தது என்று எங்களிற்கு மட்டும்தான் தெரியும். நாங்கள் தலைவரின் உப்பைச் சாப்பிட்டு வளர்ந்தவர்கள். கருணா மாறினாலும் நாங்கள் மாறவில்லை. 12 ஆயிரம் போராளிகளிற்கும் நீங்கள் மறுவாழ்வு அளித்தீர்கள் என்றால்தான் இந்தப் போராட்டம் திரும்ப துளிர்க்காது ” 
 
அத்துடன் இராணுவத்தினரை தமிழ் மக்கள் மத்தியில் நிலை நிறுத்தி வைப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் போருக்குப் பயன்படுத்தும் இராணுவத்தை வைத்து நல்லிணக்கம் செய்கிறோம் என்று சொல்வது இலங்கை அரசு மாத்திரமே. இராணுவத்தின் பிரதான செயற்பாடு பாதுகாப்பும் போரும். அதுவே இன்னொரு தேசத்தில் நிலை நிறுத்தப்படு ஆக்கிரமிப்புக்காகவும் போர் நோக்கிலுமே. தமிழ் மக்களைப் பொறுத்த வரையில் இலங்கை இராணுவம் தம்மை அழித்தொடுக்கும் தம் நிலத்தை ஆக்கிரமிப்பு இராணுவம். தமிழர்கள் மீண்டும் ஆயுதம் ஏந்துவார்கள் என்றும் அவர்களை அடக்கி ஒடுக்கி வைத்திருக்க வேண்டும் என்றும் தமிழர்களையும் தமிழ் நிலத்தையும் ஆக்கிரமிக்கவேண்டும் என்பதே இலங்கை இராணுவத்தின் பணி.
கிளிநொச்சியில் நடைபெற்ற அமர்வில் துயிலும் இல்லங்கள் மீண்டும் அமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் கோரியுள்ளனர். இலங்கையில் கல்லறைகளுடன் வன்மம் புரிந்து, இறந்தவர்களுடன் சமரிட்ட செயற்பாடாக இருக்கும் துயிலும் இல்ல அழிப்பு வரலாற்றில் ஒரு வடுவாகவே இருக்கும். இன்றும் துயிலும் இல்லங்களில் இராணுவத்தினர் முகாம் அமைத்து குடியேறிக்கொண்டு, மைதானம் அமைத்து நல்லிணக்கத்திற்காக பந்தாடுகின்றனர். இறந்தவர்கள் புதைக்கப்பட்ட மயானங்களையும் அபகரிப்பது அபகரிப்பின் உச்சம். இறந்தவர்களின் சிதைகளின்மீது மைதானம் அமைத்து பந்தாடுவது இனவெறுப்பின்,இன ஒடுக்குமுறையின் உச்சம்.
மாவீரர் துயிலும் இல்லங்களில் புதைக்கப்பட்ட தனது பிள்ளைகளின்மீது துப்பாக்கியை வைத்துவிட்டு உதைபந்தாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் தாயிடத்தில் வந்து நல்லிணக்கம் பேசுவது எவ்வளவு கொடியது? உண்மையில் இலங்கையில் தமிழ் மக்களுடன் மேற்கொள்ளப்படும் அத்தனை அணுகுமுறைகளும் இன மேலாதிக்கம் சார்ந்ததே. தமிழ் மக்களின் நிலத்தில் போர் வெறி நினைவுத் தூபிகளை அமைத்துக் கொண்டு இந்த மண்ணின் பிள்ளைகளின் மயானங்களை அழித்து அதில் பந்தாடுவதே இதற்குச் சிறந்த உதாணரம். இப்படியான அணுகுமுறைகள் வெறுப்பு சார்ந்தவை. இன்னுமின்னும் வெறுப்பையே வளர்க்கும்.
இப்படியான சிக்கல்கள் அனைத்திற்கும் காரணம் உண்மையை ஏற்க மறுப்பதேயாகும். உண்மையை ஏற்றுக்கொண்டு, இனப்படுகொலை குற்றங்களுக்காக சர்வதேசத்திடமும் தமிழ் மக்களிடமும் மன்னிப்புக் கோருங்கள் என்று முல்லைத்தீவில் பொதுமக்கள் தமது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இன விடுதலைப் போராட்டத்தை பயங்கரவாதமாகவும் இனப்படுகொலை யுத்தத்தை புனித யுத்தமாகவும் உண்மைக்ககு மாறாக சித்திரிப்பதை நிறுத்தினால் தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கினால், தமிழ் தேசத்தை அங்கிகரிப்பதுவே இலங்கைத் தீவில் இரு இனங்களுக்கு இடையிலும் நல்லிணக்கம் உருவாக்கும்.
இலங்கை அரசு அமைத்துள்ள நல்லிணக்கப் பொறிமுறை செயலணி தமிழ் மக்களிடம் கருத்தறிந்து உண்மை நிலைகளை எடுத்துரைக்குமா? இன அழிப்பை நியாயப்படுத்தி, ஆக்கிரமிப்பை நிலைப்படுத்தி, இன மேலாதிக்கத்தையும் ஒடுக்குமுறையையும் இன்னும் ஊக்குவிக்குமா அல்லது தமிழர்களின் அபிலாசைகளை ஏற்றுக்கொண்டு, உண்மைகளை ஒப்புக்கொண்டு, தமிழர்களை இன ரீதியாகவும் மன ரீதியாகவும் விடுதலையடையச் செய்யுமா?
குளோபல் தமிழ்ச் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link