Home இலங்கை சொர்ணாளி வாத்தியமும் அதன் தொன்மையும்! கலாவதி கலைமகள்.

சொர்ணாளி வாத்தியமும் அதன் தொன்மையும்! கலாவதி கலைமகள்.

by admin

சொர்ணாளி மட்டக்களப்பில் வாழும் தமிழ் மக்களின் பாரம்பரிய இசை மரபின் அடையாளமாக விளங்குகின்றது. இதனை ஒத்த வடிவங்கள் இந்தியப் பழங்குடிமக்களான இருளர், காணிக்காரர் போன்ற மக்களிடையே வழக்கில் உள்ளது. இருப்பினும் இக் குழல் வாத்தியத்தின் அளவு நாதம் இவற்றின் வேறுபட்ட வடிவங்களை இலங்கையிலும் காணலாம். மட்டக்களப்பபு பாரம்பரிய இசை மரபில் சொர்னாளி மிகவும் தொன்மையான வடிவமாக காணப்படுகின்றது. ஏனெனில் குழல் வாத்தியங்களின் அடிப்படையான வாத்தியக் கருவியாக இது அமைகின்றது. அளவில் சிறிய தன்மைணைக் கொண்ட இக் குழல் வாத்தியம் நாதத்தில் மிகவும் விரிவான சத்தத்தினைக் கொண்டதாக காணப்படுகின்றது.
மட்டக்களப்பில் நாட்டார் தெய்வ வழிபாடுகள் முக்கியமானவை. இவ் வழிபாட்டினை பழங்குடிமக்களின் வழிபாடுகள் மற்றும் பத்ததிச் சடங்கு வழிபாடுகள் எனப்பிரித்து அறியலாம். பத்ததிச்சடங்கு வழிபாடுகளில் சொர்ணாளி மிகவும் முக்கியம் வாய்ந்தது. கோயில்ச்சடங்கின் ஒவ்வொரு நிகழ்வுகளிலும் பறையுடன் இணைந்து இசைக்கப்படுவது. பத்ததிச் சடங்கில் தெய்வம் உருக்கொண்டு ஆடுபவர்கள் மந்திரத்தினால் கட்டப்படும் போது தனியே குழலை வாசிப்பதன் மூலம் மந்திரக் கட்டுக்களை அவிழ்த்தல் போன்ற கட்டுக்களை அவிழ்க்கும் மந்திரச்சடங்கு முறைமைக்கும் இக் குழல் இசை இன்றியமையாதாகிறது.
சொர்ணாளியினை நிகழ்த்தும் கலைஞர்கள் முக்கியமானவர்கள். இதனை பழகும்போது அவர் நன்றாக தன் மூச்சினை நீண்டதாக பயன்படுக்ககூடியவாராக இருத்தல்வேண்டும். அதிக ஆர்வத்தின் மத்தியிலே இதனைப் பழக்ககூடியவர்களாகவும் இருக்கின்றனர். பறைமேளக் கூத்தின் மூப்பன்(பாண்டித்தியம் பெற்றவர் அல்லது பறைமேளக் கூத்து அண்ணாவி) என்பவர் சொர்னாளி வாசிக்க கூடியவராகவே இருத்தல் வேண்டும். பறைமேளம் மட்டும் வாசிக்க கூடியவர் மூப்பனாக சமூகத்தினால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை. அனைத்து தாளங்களையும் சொர்னாளியில் வாசிக்க கூடியவராக இருத்தல் வேண்டும். சொர்ணாளி வாசிப்பினைக் கொண்டே மூப்பன் யார் என தெரிவு செய்யபப்டுகின்றது.
உலகப் பொதுமையில் பல தொன்மையான சமூகங்களில் சொர்ணாளி அமைப்பினைக் கொண்ட குழல் வாத்தியம் வாசிக்கப்படுகின்றது. இதனை தொடர்ந்து ஒன்று தொடக்கம் மூன்று மணித்தியாலங்கள் வாசிக்க கூடியவரே திறமையான கலைஞராக சமூகத்தினரால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். இதனை ஒத்த தன்மையை இங்குள்ள சொர்ணாளி வாசிப்பிலும் அவதானிக்க முடிகின்றது. பறை மேளக் கூத்தில் சொர்னாளியின் வாசிப்பு தவறினால் அது பறைமேளக் கூத்தாக பார்வைகளரால் ஏற்றுக்கொள்ளப்படுவதுமில்லை.
உள்ளுர் சமூகவரலாற்றின் கட்டமைப்பிற்கு மக்களின் சடங்கு பழக்கவழக்கங்கள் புலங்கு பொருட்கள் முக்கியமானவை. மக்களின் வரலாறு என்பது அவ் மக்களின் பண்பாட்டில் வாய் மொழிகளில் தங்கியிருக்கின்றது என்பது வாய்மொழி வரலாற்றினைக் கட்டமைக்கும் முறையியலில் முக்கியமானதாக அறிஞர்கள கருதுகின்றனர். ஒரு பொருளின் பாவனைக் காலம் கணக்கில் எடுக்கப்படுவது ஊடாக அவ் மக்களின் வரலாறு நீர்ணயிக்கப்படுகின்றது. அவ்வகையிலே சொர்னாளியும் புரதான தொன்மப் பயன்பாட்டினைக் கொண்ட குழல் வடிவமாகக் காணப்படுகின்றது. ஏனெனில் அதன் இசை என்பது முக்கியமானது. அளவு குறுகிய வடிவிலானது. திறந்தவெளிகளில் வாசிக்கப்படும் தன்மை கொண்டது. சடங்குகள் மக்கள் கூடும் வெளிகளிலே நடைபெறுகின்றன. அடைக்கப்பட்ட அறைகளைக் கடந்து ஒரு திறந்த வெளியே இதன் நிகழ்த்துகை களமாகக் காணப்படுகின்றது. இவ்வகையிலே அதன் நிகழ்த்துகைத்தளம் அதன் இசையின் வீச்சு என்பது தொன்மைச் சமூகக் கலைவடிவங்களின் தன்மையைப் பெற்றதாக காணப்படுகின்றது.
அடையாளக்கட்டமைப்பு அல்லது தங்களது பாரம்பரிய கலைகளை அடையாளப்படுத்தும் அரசியல் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டது. தமிழர் தேசியத்தின் அடியாதாரமாக நாட்டார் கலைகள் இலக்கிய வடிவங்களை தேடிச் சென்று தொகுக்கும் முறைமை உருவாகின்றது. இத்தகைய சமூகச் சூழலில் பாரம்பரிய நாட்டார் கலை வடிவங்கள் பற்றிய தேடலும் அதனை பொதுவெளி நோக்கி நகர்த்தலும் முக்கிய செயற்பாடாக அமைகின்னறது. இதன் தொடர்ச்சியில் பறை, சொர்ணாளி போன்ற வாத்தியங்கள் தொன்மை வாத்;தியங்களாக அடையாளப்படுத்தப்படுகின்றன.
பறைமேளக் கூத்தில் பறையில் வாசிக்கப்படும் தாள வாத்தியங்கள் ஒத்த இசைவான வாசிப்பே சொர்ணாளியிலும் வாசிக்கப்படுகின்றது. இரண்டும் இணைந்த பயணிப்பாகவே அளிக்கைகளைக் காணலாம். தற்காலத்தில் குறிப்பிட்ட சமூகம் சார்ந்ததாக காணப்பட பறை, சொர்ணாளி அதன் வழமையாக பழக்கப்படும் குறிப்பிட்ட குழு அல்லது சமூகத் கடந்து அனைவராhலும் பழக்க கூடிய வாத்தியக்கருவியாக பார்க்கும் போக்கு உருவக்கப்பட்டு வருகின்றது.
பாரம்பரிய அறிவு திறன்;களை பரிமாறல் முறை என்பதில் அவதானிப்பு அதனை கூட்டாக இணைந்து கற்றல் பரம்பரையாக பரிமாறல் என்னும் போக்கிலே அமைந்துள்ளன. இன்றைய சமூக மாற்றத்தின் ஒரு அம்சமாக அதன் இயற்கை சமூகச் சூழல் கடந்து அனைவராலும் பழகும் வாசிக்கும் சூழலாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே இளந்தலைமுறையினரால் பயிலப்படும் கலையாக மாற்றம் அடைந்து வருகின்றது. இதன் தார்ப்பரியத்ததை உணர்ர்த்தும் வகையிலும் பொதுவெளியில் ஒரு கலை நிகழ்த்துகையாக சொர்ணாளி இசை நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் சொர்ணாளி இசை விழா அதன் நுட்பங்களை முக்கியத்துவத்தினை திறனை வெளிக்கொணரும் வகையில் முரசம் பேரிசைக் கற்கைகள் மன்றம் மூன்றாவது கண் உள்ளுர் அறிவு திறன் செயற்பாடுகளுக்கான நண்பர் குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. தனித்த இசை வாத்தியமாக சொர்ணாளி இசைக்கலைஞர்களால் ஆற்றுகை செய்யப்படவுள்ளது.
கலாவதி கலைமகள்.

Spread the love
 
 
      

Related News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More