மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) பகுதிக்குப் போர்க்கப்பல்களை அனுப்பி நிலைமையை மேலும் சிக்கலாக்க வேண்டாம் எனப் பிரித்தானியாவிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிரித்தானியாவின் HMS Dragon போர்க்கப்பல் இப்பகுதிக்கு அனுப்பப்படவுள்ள நிலையில், ஈரானின் இந்த எச்சரிக்கை சர்வதேச அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானின் துணை வெளியுறவு அமைச்சர் விடுத்துள்ள அறிக்கையில் ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியப் போர்க்கப்பல்கள் நிலைநிறுத்தப்படுவது, ஈரானின் இறையாண்மைக்கு விடப்படும் சவாலாகக் கருதப்படும். இதற்கு “நிச்சயமான மற்றும் உடனடிப் பதிலடி” கொடுக்கப்படும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், இந்த முக்கியக் கடல்வழிப் பாதையைத் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் பிரித்தானியா இந்தப் பிராந்தியத்தில் இராணுவப் பிரசன்னத்தை அதிகரிப்பதன் மூலம் “நெருக்கடியை தீவிரப்படுத்த (Escalate)” வேண்டாம் என ஈரான் வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானியப் பாதுகாப்பு அமைச்சின் (MoD) தகவல்படி:
பிரித்தானியக் கடற்படையின் நவீனப் போர்க்கப்பலான ‘எச்.எம்.எஸ் டிராகன்’ (HMS Dragon) தற்போது மத்திய கிழக்கு நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகப் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இணைந்து வழிநடத்தும் சர்வதேசப் பாதுகாப்பு மிஷனில் (International Mission) இக்கப்பல் இணையவுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை என்பது உலகளாவிய எரிசக்தி விநியோகத்தில் மிக முக்கியமான பகுதியாகும். உலகளவில் நுகரப்படும் கச்சா எண்ணெயில் சுமார் 20% – 30% இந்தப் பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. இப்பகுதி முடக்கப்படும் பட்சத்தில் உலக நாடுகளின் எண்ணெய் விலை கடுமையாக உயரும் அபாயம் உள்ளது.
ஈரானுக்கும் மேலைநாடுகளுக்கும் இடையிலான இந்த ‘கடல் போர்’ (Tanker War) போன்ற சூழல், உலகப் பொருளாதாரத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. ஏற்கனவே பிரான்ஸின் ‘சார்லஸ் டி கோல்’ விமானந்தாங்கி கப்பல் சூயஸ் கால்வாயைக் கடந்துள்ள நிலையில், தற்போது பிரித்தானியாவின் ‘எச்.எம்.எஸ் டிராகன்’ வருகையும் ஈரானை அதிருப்தியடையச் செய்துள்ளது. தற்காப்பு மற்றும் சர்வதேசப் பாதுகாப்பிற்காகவே இந்தப் போர்க்கப்பல்கள் அனுப்பப்படுவதாகப் பிரித்தானியா கூறினாலும், ஈரான் இதனைத் தனது பிராந்திய ஆதிக்கத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. இந்தப் பதற்றம் ஒரு நேரடி இராணுவ மோதலாக மாறுமா என்பது சர்வதேச சமூகத்தின் தற்போதைய கவலையாக உள்ளது.
#IranVsUK #StraitOfHormuz #HMSDragon #MiddleEastCrisis #GlobalOilTrade

